headlines

img

நூல்வெளியீடும் இணைந்த இசைவெளியீடு

“ஜனாதிபதியை மக்களின் நாயகனாக மாற்றி படம் எடுத்து ஜனாதிபதி விருது வாங்கியவர் ராஜூமுருகன்”    இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துரையின் தொடக்க வரிகள் பார்வையாளர்களிடம் பலத்த கைதட்டலுடன் வரவேற்பைப் பெற்றது. “நேர்மையான பத்திரிக்கையாளராகத் தொடர்ந்து பயணம் செய்த அவர்,  பல இனம்,மொழி, சாதி,மதம் ஆகியவற்றின் பேரால் இந்தியா வதைமுகாமாக மாறிவருவதை  உணர்ந்து அவற்றை  இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.  இயக்குநர் ராஜூ முருகனுக்கு  இந்தப் படம் ஒரு மணி மகுடமாகஇருக்கும்.  தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்குசிவப்புக் கம்பளம் விரித்து சினிமாவுலகம் வரவேற்கும்” என்ற வரிகள்  திரைப்பட விமர்சனம் அல்ல. ராஜூமுருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள  ஜிப்ஸி  திரைப்படத்தின் முன்னோட்டம் (டீசர் )மற்றும் இசைவெளியீட்டு நிகழ்வில்  பதிவானஅதே இயக்குநரின் வாழ்த்துரை வரிகள்தான். சென்னை சத்யம் திரையரங்கு திணறும் அளவுக்கு,  திரைப்பட ரசிகர்கள்,ராஜூமுருகன் படக்குழுவினரின் புத்தாக்கத்திறன் மீது நம்பிக்கை வைத்துள்ள நண்பர்கள், திரையுலகினர்,  தோழர்கள்  திரண்டிருந்தனர்.இன்னொரு தயாரிப்பாளரின் படம்தானே என்றில்லாமல் இந்த விழாவுக்கு வந்திருந்தார்  ‘சூப்பர் குட்' நிறுவனத்தின் ஆர்.பி.சௌத்ரி. அதுமட்டுமின்றி இவை இரண்டையும் அவர்தான் வெளியிட்டு சிறப்பித்தார். திரைஉலகம் குறிப்பாக தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்களை இயக்குநர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை அறிவுரையாக இல்லாமல் அனுபவ உரையாக அவர் முன்வைத்தார். திரையரங்க மேடை  விரிந்ததாக இருந்தாலும் அதனை மொத்தமாக இட்டு நிரப்பும் நாற்காலிகள் இல்லை.  மூன்று அல்லது நான்கு இயக்குநர்கள்,  சினிமா உருவாக்கத்தின் மற்ற பிரிவு கலைஞர்கள்  அணியணியாக  அழைக்கப்பட்டனர்.  குறைந்த நேரமே பேசுவதால் அது நிறைவாகவும் செறிவாகவும் இருக்க வேண்டும் என்பதில்  கோபி நயினார்,  கரு.பழனியப்பன்,லெனின் பாரதி,  மாரி செல்வராஜ், மீராகதிரவன்உள்ளிட்ட இயக்குநர்கள் கவனமாக இருந்தனர். சமூக அக்கறையோடு கலை உருவாக்கம் செய்யும் போது அரசியல் இடம்பெறாமல்  இருந்தால் அது வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் சமைக்கப்படுகிற சுவையில்லாத பத்தியச் சாப்பாடு போன்றதுதான். ஆனால் அப்படி இல்லாமல் எந்த அரசியலோடு செயல்படுகிறோம் என்பதை நிகழ்வில் பேசியவர்கள் சூசகமாகப்  பேசாமல்மனம் திறந்தார்கள்.  இது இளம் தலைமுறை கலைஞர்களிடம்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்என்பது திண்ணம். நண்பராக இருந்தாலும் தோழராக இருந்தாலும் வயதில் சிறியவராக இருந்தாலும் சமவயது உடையவராக இருந்தாலும் அவை நாகரீகத்திற்காக ‘அவர், இவர்’  என்று மரியாதை விகுதி தன்னை அறியாமல் சேர்ந்துவிடும் . ஆனால்கவிஞர் யுகபாரதி இதில் ஒரு உடைப்பை ஏற்படுத்தினார். தம்பி ராஜூ முருகனை ‘அவன், இவன்’என்று பேசுகிற சினிமா மேடை வேறெங்கும்வாய்க்காது. இங்கே எனக்கு வாய்த்திருக்கிறதுஎன்று இருவரிடையே உள்ள  மிக நெருக்கமான நட்புறவை அவர் வெளிப்படுத்தினார். தமிழகத்தில் நடந்த மக்களவைத்  தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெற முடியாது என்று முன்னுணர்ந்து கூறினார். எதிர்காலம் எந்த திசையில் இருக்க வேண்டும்என்பதை உணர்த்தும் விதமாக இனி இளைஞர்கள் சிவப்பு நிற சட்டைக்கு மாற வேண்டும் என்பது அவரின் வேண்டுகோளாக இருந்தது.  அவரே அந்த நிறத்தில் சட்டை அணிந்து வந்து வழி காட்டவும் செய்தார்.  ஜிப்ஸியாகவே மாறி மனம் கவரும் நடிகர் ஜீவா,  ஜிப்ஸியின் மனதில் இடம் பிடிக்கும் நடிகை நடாஷா,  ஜிப்ஸி படப் பெயருக்கு ஏற்ப நாடோடி வாழ்க்கையில் சந்திக்கும் ஏராளமான இசைக்குழுக்கள், இதற்கிடையே அந்த நாடோடி சந்திக்கும் காவல்துறை அடக்குமுறைகள், மனிதத்தை மாய்க்கும் மதவெறி நிகழ்வுகள்,  அதிகாரம் செலுத்தப்பட்டு கிடைபிணமான பெண்கள் என விரியும் காட்சிகளும்  - ஒற்றைச்சொல்  வசனமானாலும் உள்ளத்தை விசையேற்றும் பாங்கு - காதுகளுக்கு இனிமையான "தேசாந்திரி பாடும் பாட்டு", "காற்றே காற்றே"போன்ற பாடல்கள், ஜிப்ஸியை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.  வித்தியாசமான இசை வெளியீடு நிகழ்வாக இதனை மாற்றியது இறைவணக்கம். படைப்பவன்தான் இறைவன் என்றால் "உதிரிப்பூக்கள்"  போன்ற திரைப்படங்களைப் படைத்த மகேந்திரனும் ஒரு இறைவன் தானே!  அவரைப்பற்றிய மலரும் நினைவுகளைக் கொண்ட ஒலி -ஒளிக்காட்சிகளால் இறைவணக்கம் செய்யப்பட்டது.  நிகழ்வுக்குக் கூடுதல் மெருகு நூல் வெளியீடு. சண்டிகரைச் சேர்ந்த பாந்த் சிங் என்ற பஞ்சாபி நாடோடிப் பாடகரைப் பற்றிய நூல். கமலாலயன் மொழியாக்கத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. எந்தப்  பிரமுகருக்கும் நாற்காலி இல்லை.  ஆனால் அவருக்கு மட்டும் நாற்காலி -  சக்கர நாற்காலி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாந்த் சிங்கின் மகள் ஆதிக்க சாதி கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டார்.  இதற்கு எதிரான சட்ட போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் அவரது இரண்டுகைகளையும் ஒரு காலையும் துண்டித்துவிட்டனர்.  ஆனால் தன்னம்பிக்கையோடு, மனம் தளராது போராடி குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெறக் காரணமாயிருந்தார். கைகள் கூழையாகிப் போனாலும் முட்டிமட்டுமே  இருக்கிற கையின்  பகுதியை மேலுயர்த்தி  பார்வையாளர்களை நோக்கி அசைத்து வந்த கம்பீரம் மெய்சிலிர்க்க வைத்தது.  பாந்த் சிங்கின் வாழ்க்கைப்  போராட்டம், அவரது பாடல் முறை அனுபவம் போன்றவற்றை  விவரிக்கும் களம்தரும் தனிநிகழ்வாக  அமையாதது வருத்தம் அளிப்பதாக இருந்தது . இருப்பினும் இசை வெளியீட்டில் ஒரு நூல் வெளியீடும் இருக்கலாம் என்பதற்கு ராஜூமுருகன் வழி திறந்திருக்கிறார் . அதற்காக  அவருக்கு வாழ்த்து சொல்லலாம்.

தொகுப்பு : சிநேகா

;